கஞ்சா பாவனையினால் சைக்கோடிவ், ஸிட்சோபேனியா ஆகிய உளவியல் நோய்கள் அதிகரித்து, சமூகத்தில் ‘பைத்தியம்’ (மனநிலை பாதிப்பு) ஏற்படும் அளவு அதிகரிக்கும்.

கஞ்சாவில் காணப்படும் Tetra Hydro Cannabinol (THC)மற்றும் Cannabidiol (CBD) போன்ற பிரதான இரசாயண வஸ்துக்களின் தொழிற்பாட்டால் சைக்கோடிவ், ஸிட்சோபேனியா, Catalepsy போன்ற அசாத்தியமான பாரிய நோய்கள் ஏற்படும். அதாவது மேற்குறிப்பிட்ட நோய் நிலைக்கு ஆளாகினால் மீண்டும் இயல்பு நிலையை அடைவது கடினமாகும். THC எனும் இரசாயணமானது உள நிலைசார் கலவையுடன் தொடர்புடையது. உடலில் காணப்படும் ஒவ்வொரு தொகுதிகளும் மிகவும் முக்கியமானவை அவற்றில் அகஞ்சுரக்கும் தொகுதியானது (Endocrine system) மூளை மற்றும் மைய நரம்புத்தொகுதியுடன் நெருங்கிய தொடர்புடையது. அகஞ்சுரக்கும் தொகுதியானது உடற் சமநிலை, ஓமோன்களின் செயற்பாடு, பசி, சிந்தனை, நோய் எதிர்ப்புத்திறன், மற்றும் உணர்ச்சிகள் போன்றவற்றையும் கட்டுப்படுத்துகிறது. மைய நரம்புத்தொகுதியின் தொடர்ச்சியான செயற்பாடுகளை கஞ்சாவிலுள்ள THC எனும் இரசாயணம் பாதிப்படையச் செய்வதினால் மூளை மற்றும், மைய நரம்புத் தொகுதியின் செயற்பாடுகள் பாதிக்கப்படுகின்றன. இதன்போதுதான் மூளையின் செயற்பாடுகளில் தாக்கம் ஏற்பட்டு மைய நரம்குத் தொகுதி மற்றும் சுற்றயல் நரம்புத் தொகுதிகளின் (CNS,PNS) செயற்பாடுகள் முடக்கப்படுகின்றன. இதனால் ஒருங்கிணைந்து செயற்படுத்தும் செயற்பாட்டுத்திறன் பாதிப்படைகின்றது. மேலும் THC எனும் இரசாயணம் மூளையில் காணப்படும் தகவல் வாங்கிகளின் செயற்பாடுகளை மந்தமாக்குகின்றது. CBD எனும் இரசாயணமானது நடுக்குவாதம், ஈரல் தொடர்பான பிரச்சினைகள், சமிபாட்டுத்தொகுதியுடன் தொடர்புடைய உடற்பாகங்களுக்கு பாரிய விளைவுகளை ஏற்படுத்துகின்றது. கஞ்சா பாவனையினால் சைக்கோடிவ், ஸிட்சோபேனியா ஆகிய உளவியல் நோய்கள் ஏற்படுமிடத்து சமூகத்தில் ‘பைத்தியம்’ (மனநிலை பாதிப்பு) ஏற்படும்; அளவு அதிகரிக்கும். இதனால் ஏனைய நோய்களுக்கு தற்போது வைத்தியர்களின் கேள்வி நிலை அதிகரித்துள்ளமையை போல ‘பைத்தியம்’ (மனநிலை பாதிப்பு) எனும் நோயால் பாதிக்கப்பட்டோரைக் குணப்படுத்துவதற்காக அல்லது அவர்களுக்கு வைத்தியம் செய்வதற்கான வைத்தியர்களினதும், வைத்தியசாலைகளினதும் கேள்வி அதிகரிக்கும், இந்த நிலைமையானது தற்கொலைத் தூண்டுதல் உட்பட பல சமூக சீர்கேடுகளை தோற்றுவிக்கும்.

மேலும் கஞ்சா பாவனையாளர்களுக்கு நரம்புத்தொகுதி பாதிப்படைவதனால் உடலுறவில் ஒருங்கிணைப்புடன் செயற்பட முடியாமல் தங்களது உடலுறவு தேவைகளை சரியாக பூர்த்தி செய்ய முடியாத நிலைமை உருவாகும். இந்நிலைமையானது மேலும் மன அழுத்தம் மற்றும் உறவுகளின் பிரச்சினைகள் அதிகரிப்பிற்கு வழிவகுக்கும். இதனால் குடும்பப் பிரிவுகள், விவாகரத்துக்கள், தற்கொலை முயற்சிகள் போன்றன சமூகத்தில் அதிகரிக்கக் கூடிய வாய்ப்புக்கள் உள்ளன. இவை சமூகம் பொருளாதார பஞ்சத்தை எதிர்நோக்குவதற்கு வழிவகுக்கும். கஞ்சா பாவனையினால் நோய் எதிர்ப்பு சக்தி குறைவடைகின்றது இதனால் பாவனையாளர்களுக்கு இருதயம், நுரையீரல் தொடர்பான நோய்கள் ஏற்படுகின்றன. இவை அதிகளவான மரணங்களைத் தோற்றுவிக்கின்றது, குறிப்பாக இளவயது மரணங்களை சந்திக்க நேரிடும். இம்மரணங்கள் பல்வேறு சமூக சீர்கேடுகளையும், குடும்ப சீர்கேடுகளையும் உருவாக்கும் என்பதில் ஐயமில்லை.

 

சுப்ரமணியம் ரமேஷ்குமார்

இளமானி பட்டம் – உளவியல் துறை

சுதேச மருத்துவ உள்ளகப் பயிற்சியாளர் – சுன்னாகம் போதனா வைத்தியசாலை68 Viewers