சிறுவர்களின் மன உளைச்சலிற்கு காரணமாக அமையும், பெற்றோர்களின் மதுசார பாவனை

உலகலாவிய ரீதியில் சிறுவர் தினம் வெவ்வேறு நாட்களில் கொண்டாடப்படுகின்றது. சிறுவர் துஷ்பிரயோகங்கள், சிறுவர் பாகுபாடு ஆகியவற்றிலிருந்து தவிர்ந்து சிறுவர்களின் வாழ்வியலில் உயர்வை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக இந்த தினத்தில் பல்வேறு செயற்றிட்டங்கள் மேற்கொள்ளப்படுகின்றன.
ஆனால் ஒவ்வொரு வேளையூம் சிறுவர்கள் எங்கேயாவது ஒரு இடத்தில் வன்முறைக்கும், துஷ்பிரயோகத்திற்கும் ஆளாக்கப்படுகின்றனர். குறிப்பாக காலையில் துயில் எழும்பும் போது பெற்றோர்களால் அல்லது பாதுகாவலர்களால் ஏதோ ஒரு வகையில் துன்புறுத்தப்பட்டு எழுப்பப்படுகின்றனர், பாடசாலையில் உடல் ரீதியாகவோ, மன ரீதியாகவோ தினமும் பாதிக்கப்படுகின்றனர், நண்பர்களின் மத்தியிலும் அதனை உணரும் சந்தர்ப்பம் அதிகமாகவே உள்ளது. மாலை நேரங்களில் வீடுகளில் இடம்பெறும் வாக்குவாதங்களாலும், வெவ்வேறு பிரச்சினைகளாலும் சில சிறுவர்கள் தினமும் துன்புறுத்தப்பட்டு வருகின்றனர்.

மாலை நேரங்களில் அநேகமாக குடும்ப பிரச்சினைகள், வாக்குவாதங்களின் போதே பிள்ளைகள் துன்புறுத்தப்படுகின்றனர். குறிப்பாக மதுசாரம், போதைப்பொருள், புகைப்பொருள் பாவனையாளர்களின் வீடுகளில் இது போன்ற பிரச்சினைகளுக்கு குறைவே இல்லை. குடித்துவிட்டு வந்து பிள்ளைகளை அடிப்பது, குடித்து விட்டு வந்ததும் அவர்களுக்கு தேவையான விடயங்கள் இல்லாவிடின் பிள்ளைகளை துன்புறுத்துவது, பிள்ளைகளுக்கு தேவையான பொருட்களை சரியான முறையில் வழங்காது அவர்களை உள ரீதியாக பாதிப்படையச் செய்வது, குடித்துவிட்டு வீட்டில் சண்டைகள் இடம்பெறும் போதும், தாயாரை அடிக்கும் போதும் பிள்ளைகளுக்கு ஏற்படும் மன உளைச்சல், குடித்து விட்டு பிள்ளைகளை தகாத முறையில் தொடுவது போன்ற பல்வேறு இன்னல்களை மதுசாரம் மற்றும் போதைப்பொருள் பாவனையாளர்கள் ஒரு பிழையும் அறியாத பிள்ளைகளுக்கு தினமும் இழைத்துக்கொண்டு வருகின்றனர். மதுசாரம் அருந்தும் வீடுகளில் வசிக்கும் 92 வீதமான பிள்ளைகள் மன உளைச்சலிற்கு ஆளாகின்றனர் என்பதும் ஆய்வு களின் முடிவுகளாகவும் காணப்படுகின்றன.
சமீப காலமாக போதைப்பொருள் பாவனையைக் காரணம் காட்டி கொடூரமான முறையில் சிறுவர்கள் துன்புறுத்தப்பட்டிருந்தனர் அவை யாரும் மறுக்கவோ மறக்கவோ முடியாத சந்தர்ப்பங்களே. இவை சிறுவர்களின் உரிமை மீறல்களின் உச்ச கட்டம். ஆகவே குறிப்பாக மதுசாரம் அல்லது போதைப்பொருள் பாவனையாளர்கள் பிள்ளைகளிடம் தகாத முறைகளில் நடந்து கொள்ள முயற்சிப்பார்கள் எனின் அதற்கு எதிரான பிரதிபலிப்புக்களை நிச்சயம் சிறுவர்கள் வழங்க வேண்டும். அடிப்பது, துன்புறுத்துவது, ஏசுவதுஇ பாலியல் வன்முறைகள் போன்ற எந்தவொரு விடயமாக இருந்தாலும் அதனை மறுத்து அதற்கான முறையான பிரதிபலிப்புக்களை வழங்க வேண்டும். பெற்றோர்கள் ஆசிரியர்கள், பாதுகாவலர்கள் மற்றும் பிள்ளைகளின் நலன் கருதி தொழிற்படும் அனைவரும் இதற்கான எதிர்ப்புச்சக்தியை பிள்ளைகளுக்கு பெற்றுக்கொடுக்க வேண்டும்.

மதுசாரத்தையோ, போதைப்பொருளையோ பாவனை செய்பவர்கள் தன்னிலை அறியாது இவற்றையெல்லாம் செய்கின்றனர் என்ற மூட நம்பிக்கையை கழற்றி எறிய வேண்டும் காரணம், இது போன்ற துன்புறுத்தல்களை அனைவரும் அறிந்தே செய்கின்றனர் மாறாக மதுசாரமோ, போதைப்பொருளோ பாவனையாளர்களின் சுய நினைவை இல்லாமல் செய்வது இல்லை பாவனையாளர்களுக்கு உடற்சோர்வை மாத்திரமே ஏற்படுத்துகின்றது. ஆகவே போதைப்பொருள் பாவனையாளர்களின் போலி விம்பங்களுக்கு பயப்படாமல் அவற்றிற்கு ஏமாறாமல் தங்களின் உரிமையை பாதுகாத்துக்கொள்வதற்கு சிறுவர்கள் மற்றும் அவர்களை சார்ந்தவர்கள் விழிப்புணர்வூட்டப்பட வேண்டும்.131 Viewers