நாம் துன்பப்பட்டு பெற்றுக்கொண்ட தீபாவளி முற்பணம் எந்த கைகளுக்கு செல்லும்?

அனைவரின் வாழ்விலும் இருளை அகற்றி ஒளியேற்றுவதற்கு வரிசையாக தீபங்களை ஏற்றிக் கொண்டாடப்படும் திருநாளே தீபாவளித் திருநாளாகும்.மேலும் இந்நாளில் நரகாசுரன் எனும் அரக்கன் அழிந்ததை ஞாபகப்படுத்தி கொண்டாடுவதற்காக தீபங்களை ஏற்றி கொண்டாடுவது தமிழர்களின் கலாச்சாரமாகும். இராவணனை அழித்து ராமன் அயோத்தி நகரை வந்தடைந்த போது அந்த மகிழ்ச்சியைக் கொண்டாடுவதற்கு அயோத்தி மக்கள் தீபம் ஏற்றி கொண்டாடிய நாள் தீபத்திருநாள் எனவும்; பல்வேறு கோணங்களில் வர்ணிக்கப்படும் தினமே தீபாவளித் தினமாகும்.
வரலாற்று ரீதியில் இவ்வளவு மகிமை வாய்ந்த தீபத்திருநாளில் மதுசாரம் அருந்த வேண்டும் என்ற கலாசாரத்தை திட்டமிட்டு உட்புகுத்தியது யார்? இந்துக்களால் கொண்டாடப்படும் இத்திருநாள் பல்வேறு இடங்களில் புனிதமாகக் கொண்டாடப்பட்டாலும் மலையகத்தில் மாத்திரம் ஏன் சாராயத்துடன் ஒன்றிணைந்துள்ளது? நாம் பண்டிகைகளைக் கொண்டாடுவதற்கும், ஏனையோருடன் ஒன்றிணைந்து வாழ்வதற்கும், பல்வேறு கலியாட்டங்களில் ஈடுபடுவதற்கும், வீட்டிற்கு வருவோரிற்கு விருந்தோம்புதலிற்கும் விருப்பமுடையவர்கள். இது போன்ற ஒவ்வொரு நற்பண்புகளையும் பயன்படுத்திக்கொண்டு இவ்வாறான அனைத்து சந்தர்ப்பங்களிலும் மதுசாரம் இன்றியமையாத ஒன்றி என்றவொரு பொய்யான கருத்தை ஒன்றிணைத்து தீபாவளியையும் சாராயத்தையும் இணைத்துள்ளனர். அதே போன்றுதான் ஒவ்வொரு முக்கியமான மற்றும் மகிழ்ச்சியான நிகழ்வையும் சாராயத்துடன் இணைத்துள்ளனர்.
இத்தினங்களில் தீபாவளியை எவ்வாறு கொண்டாடுவது? தீபாவளியை மகிழ்ச்சியாகக் கொண்டாட முடியுமா? என்கின்ற பல கேள்விகளும் ஆதங்கங்களும் தற்போது எம் மத்தியில் நிலவுகின்றது. உண்மைதான் இப்போது அத்தியாவசியப் பொருட்களின் விலையோடு எமது வருமானத்தை ஒப்பிடும் போது தீபாவளியை மட்டுமல்ல சாதாரண வாழ்க்கையைக் கூட மகிழ்ச்சியாக வாழ முடியாத நிலைதான் இருக்கின்றது. அவ்வாறு இருக்கும் போது ‘எப்படி நாம் மதுசாரம் அருந்துவது’? ‘எமக்கு அந்தளவு பணம் உள்ளதா’? ‘மலையகத்தில் மாத்திரம் மதுசாரம் குடிக்கின்றார்கள் என ஏன் கூறுகின்றனர்’? என்கின்ற பல கேள்விகளும், கோபமும் அனைவரின் மனதிற்குள்ளும் எழும். ஆனால் மறு பக்கத்தில் இத்தனை பொருளாதாரப் பிரச்சினைகள் இருக்கும் போது ஏன் வீணாக சாராயத்திற்கு செலவழிக்கின்றனர் என்கின்ற கேள்வியும், ஆதங்கமும் பலர் மத்தியில் இருக்கின்றது.


நாம் துன்பப்பட்டு பெற்றுக்கொண்ட தீபாவளி எட்வான்ஸ் யார் கைகளில் கொண்டு கொடுத்தோம்? இம்முறையும் யார் கைகளில் கொண்டு போய் கொடுக்கப் போகின்றோம்? எமது பிரதேசத்திற்கு அருகிலேயே இருக்கும் சாராய முதலாளிகளை சந்தோசப் படுத்தப் போகின்றோமா? அல்லது எமது குடும்பத்தின் சந்தோசத்திற்கு அப்பணத்தை செலவழிக்கப் போகின்றோமா என தீர்மானம் எடுங்கள். பல்வேறு பிரதேசங்களில் பண்டிகையன்றும் ருசியான உணவைப் புசிக்க முடியாமல், புத்தாடை அணிய முடியாமல் ஏனைய பிள்ளைகள் உடுத்தும் உடைகளை பார்த்து ஏங்கிக் கொண்டிருக்கும் பிள்ளைகள் இன்னமும் இருக்கின்றனர் என்பதை மறந்து விடாதீர்கள் அவர்கள் அனைவரின் பெற்றோருக்கும் பணம் இல்லாதது அல்ல பிரச்சினை அந்த பெற்றோர்கள் சாராய முதலாளிகளுக்கு பணம் கொடுத்து அவர்களை முன்னேற்றுவதுதான் பிரச்சiனை. யாரும் சொல்லித் தெரியத்தேவையில்லை உங்கள் பிரதேசத்திற்கு அருகில் இருக்கும் சாராயக்கடைகளின் (சாராய பார்களின்) முன்னேற்றத்தையும், அதன் உரிமையாளர்களின் மற்றும் அங்கு தொழில் புரிபவர்களின் முன்னேற்றத்தையும் சற்று சிந்தித்து பாருங்கள். அவர்களை பணக்காரர்களாக்குவது வேறு யாருமல்ல நடுத்தர வருமானம் பெறும் நாம் என்பதையும் மறந்துவிடாதீர்கள், கடந்த தீபாவளி பண்டிகைக்கும் முதல் நாள் குறிப்பிட்ட ஒரு பிரதேசத்தில் இயங்குகின்ற ஒரு மதுசாரசாலையில் மாத்திரம் கிட்டத்தட்ட ரூபா 25 இலட்சம் எனும் பெருந்தொகை ஒரு நாள் இலாபமாக பெறப்பட்டது என்பது மறுக்க முடியாத, மற்றும் மிகவும் வேதனைக்குரிய உண்மையாகும்.
சற்று சிந்தித்து பாருங்கள் மகிழ்ச்சியாக இருக்க வேண்டிய நாளில் தந்தை மதுசாரம் அருந்திவிட்டு பணத்தை செலவழிப்பதனாலும், மதுசாரத்தைக் காரணமாகக் கொண்டு ஏற்படுத்தும் வன்முறைகளினாலும் அல்லல் படும் பெண்களும், சிறுவர்களும் எந்தளவு மனஉலைச்சலுக்கு ஆளாகுவர்? தீபாவளி வருகின்றது அந்த வீட்டில் நிச்சயம் சண்டை நடக்கும் அதை வேடிக்கைப் பார்க்கலாம் என முன்கூட்டியே திட்டமிட்டுக் கொள்ளும் வகையில் சில வீடுகளில் தொடர்த்தேர்ச்சியாக இவை இடம்பெறதான் செய்கின்றது. தீபாவளிக்கு பார்த்துக்கொள்கின்றோம் என்று பழைய சண்டைகளையும் தேக்கி வைத்திருப்பார்கள். தீபாவளிக்கு மதுசாரம் அருந்திவிட்டு அதனைக் காரணமாக வைத்து எந்த சண்டைகளி இடம்பெற்றாலும் அந்த பலி நபரின் மீது சாட்டப்படாது மதுசாரம் என்கின்ற இரசாயணமே இது போன்ற ஒரு விடயத்தை செய்ததாகவும், இது வழமைதானே என்பது போன்றும் ஒரு கேலிக்கூத்தான பேச்சாகவே மாறிவிடும். இதனை சாதகமாகப் பயன்படுத்தி அந்த நபர் மதுசாரத்தை அருந்திவிட்டு சண்டை போடுவார் ஏனையவர் வேடிக்கைப் பார்ப்பர். இது போன்ற ஏனையவர் பார்த்து ஏளனமாக சிரிக்கும் சந்தர்ப்பங்களை இம்முறையிலிருந்தாவது தகர்த்தெரிய முற்படுவோம்.
பிரதேசத்திலேயே வாழும் மக்கள் மாத்திரமல்ல தொழில் நிமித்தம் தலைநகரத்திற்கு வந்து பண்டிகையைக் கொண்டாடுவதற்கு தமது ஊரிற்கு செல்லும் இளைஞர்கள் மதுசாரப் பாவனையைக் கவர்ச்சியாக்குவதற்கு மிக முக்கியமான காரணிகளாக இருக்கின்றனர். இவர்களின் நடை, உடை, பேச்சு, பாவனை அனைத்தும் வித்தியாசமானதாக இருக்கும் அத்தோடு பியர் டின்களும் ஒரு நவீனமானவை என காட்டித்திரிவார்கள். பிரதேசத்தில் சாதாரண தரம் கற்கும் மாணவர்களையும், உயர்தரம் கற்கும் மாணவர்களையும், ஏனைய கல்வி கற்கும் மற்றும் பிரதேசத்தில் தொழில் புரியும் நபர்களும் பியர் டின்களை வைத்திருப்பது நாகரீகமானது என நினைக்க வேண்டும் அவர்களுக்கு பியரை அல்லது சாராயத்தை பருக்க வேண்டும் என்பதே குறிக்கோள் என்பதை மறந்து விடாதீர்கள். ஆகவே பெற்றோர்கள்இது போன்று போலி நாடங்களுக்கு ஏமாந்து விடாமல் மதுசார கம்பனிகளிடமிருந்தும், அதனை விளம்பரப்படுத்தும் உங்கள் பிரதே வாசிகளிடமிருந்தும் தமது பிள்ளைகளை பாதுகாத்துக்கொள்ளுங்கள்.
இம்முறை தீபாவளியில் மதுசாரத்திற்கு செலவழிக்கும் பணத்தைக் குறைத்துள்ளோமா எனக் கணக்கிட்டுப் பாருங்கள், எமக்கு கிடைத்த தீபாவளி முற்பணத்தில் எமது வீட்டுத்தேவைகளை பூர்த்தி செய்தோமா என பாருங்கள், கடந்த தீபாவளியை விடவும் மதுசாரத்தை காரணங்காட்டி ஏற்படுத்தப்பட்ட வன்முறைகளின் அளவு குறைவடைந்துள்ளதா என பாருங்கள். தலைநகரத்தில் இருந்து வரும் இளைஞர்கள் மதுசாரத்ழத கவர்ச்சியாக்கும் அளவு குறைவடைந்துள்ளதா என சிந்தித்துப் பாருங்கள்.56 Viewers