மதுபானசாலைகளை குறைப்பது பற்றி முன்வைக்கப்பட்ட கோரிக்கை

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் மலையகத்தின் பிரதான கட்சிகள், வேட்பாளர்களிடம் முன்வைத்துள்ள சமூக நலன்சார் கோரிக்கைகள்
பற்றி பிரஸ்தாபிக்கப்பட்டு வருகின்றன. இலங்கை தொழிலாளர் காங்கிரஸானது மிக முக்கியமான ஒரு விடயம் பற்றி ஜனாதிபதி வேட்பாளர் கோத்தபாய ராஜபக்ஷவிடம் கோரிக்கை ஒன்றை முன்வைத்துள்ளதாக கடந்த 19 ஆம் திகதி சிலோன் டுடே ஆங்கில பத்திரிகை முன்பக்கத்தில் பிரதான செய்தியொன்றை பிரசுரித்திருந்தது. அதாவது மலையக பெருந்தோட்டப்பகுதிகளில் பாடசாலைகள், ஆன்மிக ஸ்தலங்களுக்கு அருகிலுள்ள மதுபான நிலையங்களை முற்றாக இல்லாதொழிக்கும் செயற்பாடுகளுக்கு முன்னுரிமை அளிக்கும் விதத்தில் பொதுஜன பெரமுன வேட்பாளரிடம் கதைத்துள்ளதாக அச்செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது வரவேற்கத்தக்கதொரு செயற்பாடாகும். வேறு எந்த கட்சிகளும் அமைப்புகளும் இது குறித்து ஏனைய வேட்பாளர்களிடம் கதைத்திருக்கவில்லை அல்லது அது தொடர்பில் கோரிக்கைகள் எதையும் முன்வைத்திராத நிலையில் இ.தொ.கா சமூக அக்கறையுடன் இக்கோரிக்கையை முன்வைத்திருக்கின்றது. எனினும் கடந்த காலங்களில் நுவரெலியா மாவட்டம் உட்பட பதுளை, மாத்தளை, கண்டி, இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களில் பெருந்தோட்டப் பிரதேசங்களை அண்டிய இடங்களில் தாராளமாக மதுபானசாலைகள் முளைத்ததை ஏன் மலையகக் கட்சிகள் கண்டு கொள்ளவில்லை என்பதும் திண்ணமே.

நன்றி வீரகேசரி90 Viewers