மலையகத்தில் ஏன் வெளிநாட்டு மோகம் அதிகரிக்கின்றது?

ஒரு பெண்ணின் மகிமையை யாரும் யாருக்கும் சொல்லித் தெரியத்தேவையில்லை. பெண்களை வலுவூட்டல், பாலியல் சமத்துவம், பெண்களுக்கான சுய வேலைத்திட்டம் என பல்வேறு வழிமுறைகளில் ஊக்கப்படுத்திக் பொண்டுதான் இருக்கின்றார்கள். இவை மட்டுமின்றி நவீன யுகம் என கருதினாலும் அன்னையர் தினம், மகளிர் தினமென வர்ணித்து சில தினங்களும் பெண்களுக்காகவே கொண்டாடப்படுகின்றமை போற்றத்தக்க விடயமே. உலகத்தில் மனிதன் எனும் படைப்பை தரக்கூடிய பெண்மைக்கு இவை ஈடாகாது.
இலங்கை போன்று அபிவிருத்தியடைந்து வரும் நாடுகளில் பெண்கள் அடக்கப்படுகிறார்கள் என ஐரோப்பியர்களின் எண்ணங்கள் இருந்தாலும், எமது நாட்டை பொறுத்தவரையில் அதை நூற்றிற்கு நூறு வீதம் ஏற்றுக்கொள்ள முடியாது. பாலியல் சமத்துவம் மிக்க ஒரு நாடாக இலங்கை வளர்ச்சியடைந்து வருவது மகிழ்ச்சிக்குரிய விடயமே.
வலுவான பெண்கள் ஏனைய பெண்களுக்கும் முன் உதாரணமாக இருக்க வேண்டிய காலம் இது. எனினும் இன்று எமது நாட்டுப் பெண்களுக்கு என்ன நடக்கின்றது? இலங்கையின் வருமானத்தில் பிரதான இடங்களை வகித்துக்கொண்டிருக்கும் உழைப்பின் மூலாதாரங்களே பெண்கள்தான். இவர்களின் மறைவுகளை எவ்வாறு தாங்கிக்கொள்வது?
இந்நாட்களில் ஊடகங்களிலும் கூட இடத்தை பிடித்திருக்கும் பெண்களின் மரணங்கள்… குறிப்பாக வெளிநாடுகளுக்கு உழைக்கச்சென்ற பெண்களின் மரணங்கள்! அனுபவம் மற்றும் அறிக்கைகளின் படி, வெளிநாடுகளுக்கு தொழில் நிமித்தம் செல்லும் பெண்கள் மரணித்த சடலங்களாக இலங்கைக்கு வருவதும், வெளிநாடுகளிலிருந்து உயிருடன் வந்த பெண்கள் 2 அல்லது 3 மாத கால இடைவெளியில் மரணிப்பதும் (குறிப்பாக சிறுநீரக நோயினால்) மலையகத்தை பொருத்தளவில் அதிகரித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
வெளிநாட்டு மோகம் ஏன் அதிகரிக்கின்றது? வறுமை என்று ஏன் ஒரு போர்வை சுற்றிக் கொண்டுள்ளது? கல்வி, சுகாதாரம், போசாக்கு மட்டம் என அத்தனை அடிப்படை விடயங்களிலும் வறுமையை மலையகம் எதிர்நோக்குகின்றது.


2009-2013 ஆண்டு வரையிலான சமூக மற்றும் பொருளாதார நிலைமைகள் பிரிவின் தகவல்களுக்கு அமைய, 2012 – 2013 ஆண்டுக் காலப்பகுதியில் 1.8 வீதமான செலவையே கல்விக்காக மேற்கொண்டுள்ளனர். இதற்கமைய கல்விப் பொதுத் தராதர உயர்தரத்தில் 2009 – 2010 ஆண்டுக்காலப்பகுதியில் 2.5 வீதத்தினர் சித்திபெற்ற அதே வேளை 2012 – 2013 ஆகிய ஆண்டுக் காலப்பகுதியில் 2.2 வீதமாக வீழ்ச்சியடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. தேயிலைக் கொழுந்து பறித்து கஷ்டப்படுவது மட்டுமின்றி விறகுக்காடுகளிலும் இன்னல் படுகின்றனர், மலையகத்திலேயே 95.7 வீதம் என்கின்ற அதிகமான விறகுப் பாவனையுள்ளது என 2012 – 2013 அறிக்கைகள் கூறுகின்றன.
இவ்வளவு சிறிய தொகையை கல்விக்கு செலவு செய்த மக்கள் 2009 – 2010 ஆண்டுக் காலப்பகுதியில் 5.1 வீதமான தொகையை மதுசாரத்திற்கு செலவழித்தமையோடு அத்தொகை 2012 – 2013 ஆண்டுக் காலப்பகுதியில் 5.4 என்ற வீதத்திற்கு அதிகரித்துள்ளதாகவும் தரவுகள் வெளிப்படுத்துகின்றன.
சில நேரங்களில் கஷ்டம் நிலவினாலும், ஆண்கள் அதிகமாக செலவழிக்கும் மதுசாரப் பாவனையின் செலவீனத்தை உணர்ந்தார்கள் எனின் பெண்களின் மனக்கவலை மட்டுமின்றி வெளிநாடுகளிலிருந்து வரும் சடலங்களும் குறைவடையும்.
கள ஆய்வுகளின் படி கிட்டத்தட்ட 1,300,000 (13 இலட்சம்) எனும் பெரும்பகுதியை ஒரு தோட்டத்திலிருந்து மட்டும் அங்குள்ள ஆண்கள் சாராயக் கம்பனிகளுக்கு சுரண்டியெடுக்க அனுமதியளிக்கின்றனர்.
ஆனால், வீடு கட்டுவதற்கும், பொருள் சேர்ப்பதற்கும், பிள்ளைகளின் எதிர்காலத்தை பாதுகாப்பதற்கும் தூதரங்களை நம்பி மனைவியர்களை கடல் கடந்து அனுப்பி வைக்கின்றனர். பிள்ளைகளின் வயதெல்லையையும் கண்டுக்கொள்ளாத சில அரச அதிகாரிகள் இதற்கு அனுமதியளிக்கின்றனர். இது எந்த விதத்தில் நியாயம்?
நீங்கள் கஷ்டப்பட்டு உழைக்கும் பணத்தில் சந்தோஷமாக வாழும் உரிமை உங்களுக்கே உண்டு. மூன்றாம் நபரான சாராயக்கம்பனிகளுக்கு உங்களது பணத்தை சுரண்டியெடுக்க அனுமதியளிக்காதீர்.
இப்பொழுது மதுசாரம் அருந்தும் ஒவ்வொரு நபரும் பிள்ளை பராயத்தை கடந்தே வந்திருப்பீர்கள், சில வருடங்கள் கடந்த பின்னர் உங்களது பிள்ளைகளும் மதுசாரம் அருந்தக் கூடிய வாய்ப்பு அதிகமாகவே உள்ளது. உங்களது பிள்ளைகளையேனும் காப்பாற்றிக்கொள்ள முயற்சி செய்யுங்கள்.
மனைவி, பிள்ளைகள் மீது அக்கறையும், அன்பும் இருக்கின்ற மதுசாரம் அருந்தும் கணவர்மார்களாக இருந்தால் இன்றிலிருந்தாவது உங்களது மதுசார செலவைக் கணக்கிட்டுப் பாருங்கள், குறைக்க முற்படுங்கள், மனைவி, பிள்ளைகளுடனான சந்தோஷமான வாழ்க்கையை தொடருங்கள்.133 Viewers