மின் சிகரெட்டை தடை செய்ய வலியுறுத்தும் சமூக ஆர்வலர்கள்
பதின்ம வயதிலும், வாலிப வயதிலும் எம்மில் பலரும் ஏதேனும் சில காரணங்களைச் சொல்லி சிகரெட் பிடிக்கத் தொடங்குகிறார்கள். பிறகு இந்தப் பழக்கத்திற்கு அடிமையாகி விடுகிறார்கள். நாளடைவில் இவர்கள் நுரையீரல், இதயம், உணவு குழாய், சுவாச குறைபாடுகள், குழந்தையின்மை உள்ளிட்ட பல்வேறு உடல் ஆரோக்கிய சீர்கேடுகளுக்கு முகம் கொடுக்கிறார்கள்.
இந்நிலையில் சிகரெட் பழக்கத்திற்கு அடிமையானவர்களை அதிலிருந்து மீட்பதற்கு மாற்றுவழி என மின் சிகரெட் அதாவது இ (E)-சிகரெட் அறிமுகமானது.
தற்பொழுது மின் சிகரெட்டை புகைப்பவர்கள் அதற்கும் அடிமையாகி தங்களது உயிரை விட்டிருக்கிறார்கள் . உலக சுகாதார நிறுவனத்தின் அறிக்கையின்படி, அமெரிக்காவில் இதுவரை 5க்கும் மேற்பட்டவர்கள் மின் சிகரெட் புகைப்பதற்கு அடிமையாகி நுரையீரல் நோய் ஏற்பட்டு மரணம் அடைந்திருக்கிறார்கள் என்று தெரிவிக்கிறது. இதனால் உலகின் பல பகுதிகளிலும் மின் சிகரெட்டையும் தடை செய்ய வேண்டும் என்ற குரல் ஒலிக்கத் தொடங்கியிருக்கிறது.
மின் சிகரெட்டை தடை செய்ய வேண்டும் என்று வலியுறுத்தும் சமூக ஆர்வலர்கள், அதற்கான காரணமாக முன்வைப்பது,‘ இந்தப் பழக்கம் தெற்காசிய இளைஞர்களிடையே மிக வேகமாக பரவி, அவர்களது மூளை செயல்பாட்டை முடக்குவதுடன், அவர்களால் மீண்டும் இந்த பழக்கத்தில் இருந்து மீட்பது கடினமான காரியமாகிவிடுகிறது’ என்கிறார்கள்.
அதே தருணத்தில் சாதாரண சிகரெட்டுகளை போலல்லாமல் மிக கவர்ச்சியான வடிவங்களில் தெற்காசிய சந்தையில் இவை நானூறுக்கும் மேற்பட்ட வணிகச் சின்னங்களுடன் அறிமுகமாகிக் கொண்டேயிருக்கின்றன.
இலத்திரணியல் நிக்கோட்டின் டெலிவரி சிஸ்டம் என்பது தான் மின் சிகரெட் எனப்படும். இவ்வகையினதான மின்சிகரெட்டுகள் வடிவமைக்கும்போது புகையிலை நேரடியாக பயன்படுத்தப்படுவதில்லை. அதற்கு பதிலாக பற்றரியிலிருந்து ஆவி கசிவது போல் வடிவமைத்திருக்கிறார்கள். இதில் பற்றரி சொல்யூஷனிலிலிருந்து ஆவி வெளியேற அவர்கள் பின்பற்றும் வழிமுறை மிக மோசமான விளைவுகளை ஏற்படுத்தக் கூடியவை என கண்டறியப்பட்டுள்ளது. குறிப்பாக இதில் புரோபலீன் கிளைக்கால், கிளிசரால் ஆகியவை சேர்க்கப்படுகின்றன. இவை அனைத்துமே நுரையீரலின் ஆரோக்கியத்திற்கு கேடு விளைவிக்கக் கூடியவை.
மின் சிகரெட்டுகளில் உள்ள நிக்கோட்டின் புற்றுநோய்களை உண்டாக்கும் காரணிகளில் ஒன்றாக இல்லாவிட்டாலும், புற்றுநோய் தோன்ற செய்யும் தூண்டுகோலாகவும், ஊக்குவிக்க வகையிலும் செயல்படும். குறிப்பாக மின் சிகரெட்டுகளை பயன்படுத்தும் பெண்கள், அவர்களின் பேறுகாலத்தின்போது மோசமான பின் விளைவுகளை ஏற்படுத்துவதுடன் இதய பாதிப்புகளையும் உண்டாக்குகிறது என்று கண்டறிந்திருக்கிறார்கள்.
அதனால் மின் சிகரெட்டுகளை புகைப்பதும் உடல் ஆரோக்கியத்திற்கு கேடு விளைவிப்பதுடன் மரணத்திற்கு காரணமாகும் என்பதால் அந்த பழக்கத்தையும் முற்றாக தவிர்க்க வேண்டும்.
டொக்டர் தீபா செல்வி
69 Viewers